தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மாறிவிட்டது என்று கூறலாம். அவர்கள் சுற்றியுள்ள சூழல் முழுவதும் முன்னேற்றத்திற்கானதாக இல்லாமல், பல்வேறு கவனச்சிதறல்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக செல்போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகளவில் அடிமையாகி, அதிலுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே அதிகம் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பாடப்புத்தகத்திலேயே சினிமா பாடல் அச்சிடப்படும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசாவில் 5ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் பாலிவுட் பாடல் இடம்பெற்றுள்ளதாக இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாடல், 1999ஆம் ஆண்டு வெளியான “Humm Hain Dil De Chuke Sanam” திரைப்படத்தில் இடம்பெற்ற “Nimbooda Nimbooda” பாடலின் வரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த அந்த திரைப்படத்தின் பிரபல பாடல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பலரும் பள்ளிக் கல்வித்துறையை கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர். பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவதற்கு முன்பு பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில், இவ்வளவு பெரிய பிழை எப்படி ஏற்பட்டது என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், பள்ளிப் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணியில் கூடுதல் கவனமும் பொறுப்புணர்வும் அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், சிலர் இது பதிப்பு அல்லது அச்சு பிழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மும்பை வடக்கு மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வர்ஷா ஏக்நாத் கெய்க்வாட் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேர்வுக்கு படிக்காத மாணவர் ஒருவர் விடைத்தாளில் “ஷோலே” திரைப்படத்தின் கதையை எழுதியதாக பரவலாக பேசப்பட்ட பழைய நகைச்சுவையை நினைவுபடுத்தி, அதே நிலை பாடத்திட்ட வடிவமைப்பில் ஏற்பட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கல்வித் துறை சார்பில் விரைவில் விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: இறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா? காரணம் இது தான்… கனவு சாஸ்திரம் சொல்லும் விளக்கம்..


