தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த ஒரு கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் அருகே உள்ள வேட்ரப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், கடந்த 7 ஆண்டுகளாக அரூர் திரு.வி.க. நகரில் ஜிம் நடத்தி வந்துள்ளார். தனது ஜிம்முக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் சிலம்பரசன் நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது.
கடந்த அக்டோபர் மாதம், மாணவி தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலம்பரசன் அவர்களை மறித்து, “வீட்டில் விட்டு விடுகிறேன்.. என்னுடன் வா” என்று கூறி மாணவியை மட்டும் காரில் ஏற்றியுள்ளார். ஆனால், அவர் மாணவியின் வீட்டுக்குச் செல்லாமல், கடத்தூர் செல்லும் சாலைக்குக் காரைத் திருப்பிச் சென்றுள்ளார்.
அங்கு காரை ஓரமாக நிறுத்திய சிலம்பரசன், மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்கக் கொடுத்து, அவர் மயக்கமடைந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறி மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, நடந்த அனைத்தையும் தனது தாயாரிடம் மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். உடனடியாகப் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஜிம் உரிமையாளர் சிலம்பரசனைத் தீவிரமாக விசாரித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிலம்பரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது அவர் தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜிம் உரிமையாளர் பள்ளி மாணவிக்கு அளித்த பாலியல் தொல்லை சம்பவம் அரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



