சென்னை ராமபுரம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோதலில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்ய முயன்ற காவல்துறை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தனது நண்பர் அசோக் என்பவருக்கு கடனாக 1500 ரூபாய் கொடுத்திருக்கிறார். கடனாக வாங்கிய பணத்தை அசோக் நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அசோக்கை சந்தித்த சிரஞ்சீவி தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு இருக்கிறார்.
அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவலர் பிரகாஷ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது ஆத்திரத்தில் இருந்த சிரஞ்சீவி காவலர் பிரகாஷை சரமாறியாக தாக்கியதாக தெரிகிறது.
இதனால் காவலர் பிரகாஷ் மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பட்டப் பகலில் போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.