தன்னைவிட குடும்பத்தில் யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தனது 3 வயது சொந்த மகன் உட்பட நான்கு சிறுமிகளை அடுத்தடுத்து கொலை செய்த 34 வயது சைகோ பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவங்கள் ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடந்த திருமணத்திற்கு, தனது தாத்தா-பாட்டியுடன் வந்திருந்த 6 வயது சிறுமி திடீரென மாயமானார். இதனால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பதற்றமடைந்தனர்.
சிறுமியை பல இடங்களில் தேடிய நிலையில், திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையில், தண்ணீர் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் சிறுமி உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமி முழுமையாக நீரில் மூழ்கவில்லை; தலை மட்டும் நீரில் மூழ்கியிருந்தது தெரியவந்தது. இதனால் இது விபத்து மரணம் அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
திருமண மண்டபத்தில் இருந்த அனைவரிடமும் போலீசார் விசாரித்தனர். பூஜா என்ற பெண் அளித்த தகவல்களில் முரண்பாடு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், சிறுமி விதியை தானே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில் வெளிவந்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்தது.
போலீசாரிடம் பூஜா, “தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது. அந்த சிறுமி தன்னைவிட அழகாக இருந்ததால் கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார். கொல்லப்பட்ட சிறுமி பூஜாவின் அண்ணன் மகள் ஆவார். சிறுமி மாடிக்குச் செல்லும்போது அதை கவனித்த பூஜா, அவரை பின்தொடர்ந்து சென்று, அங்கிருந்த ஸ்டோர் ரூமுக்குள் அழைத்து, தண்ணீர் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் தலை மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், எதுவும் நடக்காதது போல வெளியே வந்து, மற்றவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடும் நாடகத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுபோலவே, இதற்கு முன்பும் மேலும் மூன்று குழந்தைகளை பூஜா கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2023 ஜனவரி மாதம், தனது மைத்துனியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவரது 9 வயது மகளான இஷிகாவை தண்ணீரில் மூழ்கடித்து பூஜா கொலை செய்துள்ளார்.
அந்த சம்பவத்தை தனது 3 வயது மகன் சுபம் பார்த்துவிட்டதால், உண்மை வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில், பின்னர் தனது சொந்த மகன் சுபமையும் இதே முறையில் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தனது சகோதரரின் 6 வயது மகள் ஜியாவையும் பூஜா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். நான்கு அப்பாவி குழந்தைகளின் உயிரை பறித்த பூஜாவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஒரு மாதத்திற்கு தேநீரில் சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் உங்கள் உடலில் இதுதான் நடக்கும்!



