தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சித்த மருத்துவத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ.2 கோடியில் அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான மசோதா, கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகம் அமைப்பதற்காக தமிழக அரசு 20 ஏக்கர் நிலத்தையும் மாதவரம் அருகில் ஒதுக்கியது.
ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் தரப்பில் இருந்து மசோதா தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. அதற்கு, அரசு சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன்பின்னரும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர், கடந்த ஆண்டு மசோதாவை திருப்பியனுப்பினார். இதையடுத்து, கடந்த அக்.16-ம் தேதி சட்டப்பேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீ்ண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
சட்ட மசோதாக்கள் விவகாரம் மற்றும் நிகழ்வுகளில் ஆளுநர் வெளியிடும் கருத்துகள் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு தற்போது அனுப்பியுள்ளார். இந்தச் சூழலில் ஆளுநர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் வரை அங்கு இருப்பார் என்றும், அதன்பின் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை தரப்பில் செய்தி வெளியிட்டுள்ளது .



