ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் பான் கார்டு இனி செல்லுபடியாகாது. இந்த மாற்றம் நவம்பர் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது, இனி அனைத்து ஆதார் மையங்களிலும் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. இதனால், ஆதார் பயனர்கள் பெயர் மாற்றத்திற்கு மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்;
இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், அரசு ஊழியர் அடையாள அட்டை, ஓய்வூதியர் அட்டை, MGNREGA வேலை அட்டை, ST/SC/OBC சான்றிதழ், கல்வி வாரிய சான்றிதழ்கள், திருமண சான்றிதழ், விவாகரத்து உத்தரவு, கெஜட் அறிவிப்பு (பெயர் மாற்றத்திற்கு சிறப்பாக) மற்றும் எம்பி/எம்எல்ஏ/கெஜட்டட் அதிகாரிகளால் வழங்கப்படும் சான்றுகள். இவை அனைத்தும் புகைப்படத்துடன் இருக்க வேண்டும் அல்லது சரிபார்க்கப்பட வேண்டும்.
இந்த மாற்றம் ஆதார்-பான் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் உடன் பான் இணைக்காவிட்டால், பான் அட்டை செயலிழக்கும் என்று வருமான வரி துறை எச்சரித்துள்ளது. ஆனால் பெயர் வேறுபாடு இருந்தால், முதலில் ஆதாரில் பெயரை சரி செய்ய வேண்டும். இதற்கு பான் பயன்படுத்த முடியாது என்பதால், பயனர்கள் மாற்று ஆவணங்களை தயாரித்துக்கொள்ள வேண்டும். uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய ஆவணங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.



