ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், சிந்தூரு–மாரேடுமில்லி காட் சாலையில் நள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
9வது மைல்கல் பகுதியில் கூர்மையான வளைவில் திரும்பும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புச் சுவரில் மோதியது. அதன் பின் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்து நடந்த பகுதி மலைப்பாங்கானது என்பதால் மொபைல் நெட்வொர்க் மிகவும் குறைவு. இதனால் அதிகாரிகளுக்கு விபத்து தகவல் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும், மோதுகுண்டா அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிந்தூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடிபாடுகளில் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



