“எங்களுக்கும் அது சொந்தம்..” பாகிஸ்தான் கல்லூரிகளில் சமஸ்கிருதம், மகாபாரதம், பகவத் கீதை பாடங்கள்!

pakistan sanskrit

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முதன்முறையாக, பாகிஸ்தானில் ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட உள்ளது.. லாகூர் பல்கலைக்கழகம் Lahore University of Management Sciences (LUMS), சமஸ்கிருதத்தில் நான்கு கிரெடிட் பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்த நாட்டில் சமஸ்கிருதக் கல்வியை மீண்டும் உயிர்ப்பிக்கும் அரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.


இந்த புதிய முயற்சிக்குப் ஃபார்மேன் கிறிஸ்துவ கல்லூரியில் சமூகவியல் இணைப் பேராசிரியராக உள்ள டாக்டர் ஷாஹித் ரஷீத் என்பவரின் நீண்டகால முயற்சிகளே காரணம் என்று கூறப்படுகிறது.. அவர் பல ஆண்டுகளாக சமஸ்கிருதத்தை ஆய்ந்து வருகிறார்.

டாக்டர் ரஷீத் இதுகுறித்து பேசிய போது “பாரம்பரிய மொழிகளில் மனிதகுலத்துக்கான பெரும் ஞானம் அடங்கியுள்ளது. நான் முதலில் அரபி மற்றும் பாரசீக மொழிகளை கற்றேன். அதன் பிறகே சமஸ்கிருதத்தைப் படித்தேன்.. எனது சமஸ்கிருதக் கற்றலின் பெரும்பகுதியும் ஆன்லைன் தளங்களின் மூலம் கிடைத்தது..

பாரம்பரிய சமஸ்கிருத இலக்கணத்தை முழுமையாக கற்றுக்கொள்ள சுமார் ஒரு ஆண்டு எடுத்துக்கொண்டது. இன்னும் நான் அதை தொடர்ந்து படித்து வருகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று மாதங்கள் நடைபெற்ற வார இறுதி பயிற்சி வகுப்பிலிருந்து உருவான இந்தப் பாடநெறி, மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானில் பாரம்பரிய மொழிகளுக்கான கல்வி ஆர்வம் மீண்டும் உருவாகும் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்த விஷயத்தில் லாகூர் பல்கலைக்கழகத்தின் குர்மானி மைய இயக்குநர் டாக்டர் அலி உஸ்மான் காஸ்மி முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தானில் உள்ள சமஸ்கிருதக் கைப்பிரதிகள் மிகவும் செழுமையானவை; ஆனால் அவை போதிய அளவு ஆராயப்படாமல் இருக்கின்றன என்று கூறினார்.

மேலும் “ பஞ்சாப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பனை ஓலை சமஸ்கிருதக் கைப்பிரதிகள் மிகப் பெரிய தொகுப்பாக உள்ளன. 1930-களில் JCR வூல்னர் என்ற அறிஞர் இந்த சமஸ்கிருத பனை ஓலை கைப்பிரதிகளை முறையாக பட்டியலிட்டார். ஆனால் 1947க்குப் பிறகு எந்த பாகிஸ்தான் கல்வியாளரும் இந்தத் தொகுப்பை ஆராயவில்லை. வெளிநாட்டு ஆய்வாளர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளூரில் அறிஞர்களை பயிற்றுவித்தால் இந்த நிலை மாறும்,” என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் ஷாஹித் ரஷீத், சமஸ்கிருதம் படிப்பதைப் பற்றி பலரும் கேள்வி எழுப்புவதாக கூறினார். குறிப்பாக, சமஸ்கிருதம் ஹிந்து மத நூல்களுடன் தொடர்புடைய மொழி என்ற பார்வையால் அவரிடம் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதுகுறித்து பேசிய அவர் “ நாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளக் கூடாது? இது முழு இந்தப் பிராந்தியத்தையும் இணைக்கும் மொழி. சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை பாணினியின் கிராமம் இந்தப் பகுதியில்தான் இருந்தது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இங்கே பெருமளவு எழுத்துப் பணிகள் நடந்துள்ளன. சமஸ்கிருதம் ஒரு மலை போன்றது.. ஒரு பண்பாட்டு நினைவுச்சின்னம். அதை நாமும் சொந்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரே ஒரு மதத்துடன் மட்டும் இணைந்தது அல்ல; இதுவும் நம்முடையதே,” என்று அவர் விளக்கினார்.

டாக்டர் ஷாஹித் ரஷீட், எல்லைகளைத் தாண்டி பாரம்பரிய மொழிகளைப் பரவலாகக் கற்றுக்கொள்வது, தென்னாசியப் பிராந்திய உறவுகளை புதிய கோணத்தில் மாற்றக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் அதிகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அரபியை கற்றுக்கொண்டால், அதேபோல் பாகிஸ்தானில் அதிகமான முஸ்லிம்கள் சமஸ்கிருதத்தைப் படித்தால், அது தென்னாசியாவுக்கு ஒரு புதிய, நம்பிக்கையூட்டும் தொடக்கமாக இருக்கும். அப்போது மொழிகள் தடைகளாக அல்ல, பாலங்களாக மாறும்,” என்று அவர் கூறினார்.

மொழி – எல்லை அல்ல, ஒரு பாலம்

டாக்டர் ரஷீட்டின் கருத்துப்படி, மொழி என்பது “ஒரு பாலம்” — பொதுவான வரலாற்றில் ஊன்றிய ஒன்றாக, அது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. அவரது முதல் மாணவி அவரது மகளே; இன்று அவர் தேவநாகரி எழுத்தில் சரளமாக எழுதும் திறன் பெற்றுள்ளார்.

டாக்டர் ரஷீட், தனது வேர்களை கர்நாலில் உள்ள ஒரு கிராமத்துக்கு இணைக்கிறார். மேலும், அவரது பாட்டிகளில் ஒருவர் இன்றைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷேக்புராவைச் சேர்ந்தவர். அரசியல் மற்றும் எல்லைகள் பிரித்தாலும், ஒரே நாகரிகப் பண்பாட்டு நிலப்பரப்பை நினைவூட்டும் இந்த தொடர்புகளை அவர் முக்கியமாகக் கருதுகிறார் என ThePrint செய்தி தெரிவித்துள்ளது.

“தேவநாகரி எழுத்து எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது. அது மிகக் கலைநயமிக்கது; ஆழமான பொருள் கொண்டதாக எனக்குத் தோன்றியது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்..

இந்த முயற்சி ஒரு பாடநெறியுடன் மட்டும் முடிவடையாது என டாக்டர் அலி உஸ்மான் காஸ்மி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை மையமாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட (structured) பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

“அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், பாகிஸ்தானிலேயே இருந்து கீதையும் மகாபாரதமும் குறித்து ஆழமான ஆய்வு செய்யும் அறிஞர்களை நாம் காண முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சமஸ்கிருதப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கியத்துடன் தொடர்புடைய பண்பாட்டு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதில், மகாபாரத தொலைக்காட்சி தொடரின் புகழ்பெற்ற தலைப்புப் பாடலான ‘ஹை கதா சங்க்ராம் கி’ என்பதின் உருது மொழிபெயர்ப்பும் இடம்பெறுகிறது. இதன் மூலம், சமஸ்கிருத இலக்கியம் மொழி மட்டுமல்ல, ஒரு விரிந்த பண்பாட்டு பாரம்பரியமாகவும் மாணவர்களுக்கு அறிமுகமாகிறது.

Read More : 40 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்திற்கு வந்த பெண்ணை பணிநீக்கம் செய்த நிறுவனம்.. நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு..!

English Summary

For the first time since the partition of India and Pakistan, Sanskrit is set to be taught in a university classroom in Pakistan.

RUPA

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு..! இனி பிஎம் கிசான் ரூ.12,000? மத்திய அரசு என்ன சொன்னது?

Sat Dec 13 , 2025
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களை ஈர்த்து வருகின்றன.. குறிப்பாக 9 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் பிஎம் கிசான் திட்டம் மீது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம் குறித்த பல தகவல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றில் சில மட்டுமே உண்மையானவை. சில தவறான தகவல்களும் பரவி வருகின்றன.. சமீபத்தில் அப்படி ஒரு தவறான தகவல் பரவியது.. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் […]
pm kisan

You May Like