திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவர் கண் முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அதிகளவில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கல் குவாரியில் வேலை செய்ய வந்துள்ளனர். அவர்களுக்கு அந்தப் பகுதியில் செயல்படும் ஒரு ஏஜெண்ட் மூலம் வேலை ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், குறைந்த சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், அந்த கல் குவாரியில் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவுக்கு வேறு வேலைக்காக செல்லப்போவதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏஜெண்ட், கல் குவாரியிலேயே வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தொலைபேசி மூலம் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து பைக்கில் வந்த அவர், சிவந்திப்பட்டி அருகே காத்திருந்துள்ளார். அரசன்குளத்திலிருந்து நெல்லைக்கு ஆட்டோவில் பயணம் செய்த அந்த அசாம் தம்பதியை வழிமறித்த அவர்கள், “பணம் திருடிவிட்டனர்” என கூறி ஆட்டோவை நிறுத்தி, தம்பதியை கட்டாயமாக இறக்கி அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, கணவரை கடுமையாக தாக்கிய பின்னர், அவரது கண் முன்னே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம், சிவந்திப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



