ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.கவுக்கு திருவாளர் பழனிசாமி ஒத்து ஊதுகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ #VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே! 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர்.
அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது. தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது. திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!
கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
100 நாள் வேலை திட்டம் என்ன சர்ச்சை?
வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
இந்த நிலையில் இந்த திட்டத்தின் பெயரை ‘ விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மேலும் மத்திய அரசு நிதியை 90%லிருந்து 60 ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.. இதுதொடர்பாக புதிய மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது.. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் உடனடியாக மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்..
முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் 100 நாள் வேலை திட்டம் பெயர் குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? 3 வேளாண் சட்டங்கள், சிஏஎ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி? என்று கேள்வி எழுப்பி இருந்தார்..
எடப்பாடி பழனிசாமியின் பதில்
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் “2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்,
மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார் .
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட
“x” தள பதிவில் ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை?
இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சை துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது ? தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்க்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என்று கூறியிருந்தார்..
Read More : Flash : விஜய்யை பார்க்க சென்றவருக்கு திடீர் வலிப்பு..! ஈரோட்டில் முதல் அதிர்ச்சி சம்பவம்! Video!



