2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுக நோக்கி ஈர்க்கும் படலத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அவர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்த இணைப்பு நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அங்கேயே மற்ற கட்சிகளிலிருந்து தொண்டர்கள் விலகி அதிமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு மற்றும் தவெக போன்ற புதிய கட்சிகள் ஒருபுறம் களம் இறங்கியிருந்தாலும், இபிஎஸ் தனது தலைமையிலான அதிமுகவை பலப்படுத்துவதில் குறியாக உள்ளார். கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் இபிஎஸ் தீவிரம் காட்டுவதற்குப் போட்டியாக, மாற்றுக் கட்சியினரைத் தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக உள்ளிட்ட மற்ற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
Read More : குளிர்காலத்தில் இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க..!! மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?



