2025-ஆம் ஆண்டு இந்தியக் கடன் சந்தையில் தனிநபர் கடன் வாங்குவோருக்கு ஒரு நிம்மதியான ஆண்டாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த வட்டி விகிதங்கள், இந்த ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ரெப்போ’ விகிதத்தை சுமார் 1.25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்தது. இது வங்கிகளின் செயல்பாட்டுச் செலவைக் குறைத்ததால், அதன் பலன் மறைமுகமாகத் தனிநபர் கடன் வட்டி விகிதக் குறைப்பாக வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இதன் நேரடி விளைவாக, முன்னனி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தற்போது 9.75% முதல் 9.99% வரையிலான தொடக்க வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்கி வருகின்றன. 2025-ன் தொடக்கத்தில் 10.5% க்கும் அதிகமாக இருந்த இந்த விகிதங்கள், தற்போது ஒற்றை இலக்கத்தை நோக்கிச் சரிந்துள்ளன. குறிப்பாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வட்டி விகிதத்தை 12.60 சதவீதத்திலிருந்து 10.05 சதவீதமாகக் குறைத்து பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. அதேபோல், ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஆக்சிஸ் (Axis) போன்ற தனியார் வங்கிகளும் தங்களின் வட்டி விகிதங்களை 9.99% என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும் தங்களின் வட்டி விகிதங்களில் சரிவைச் சந்தித்துள்ளன.
டிசம்பர் 2025 நிலவரப்படி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 9.00% என்ற மிகக் குறைந்த தொடக்க வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் கடன் பெறுபவரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score), வருமான நிலைத்தன்மை மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனம் போன்ற காரணிகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. முறையான கடன் வரலாறு இல்லாதவர்களுக்கும், வருமானச் சான்றுகள் பலவீனமாக உள்ளவர்களுக்கும் வட்டி விகிதம் 20 சதவீதத்தைத் தாண்டவும் வாய்ப்புள்ளது. மேலும், வங்கிகள் கடன் தொகையில் 0.35% முதல் 5% வரை செயலாக்கக் கட்டணமாகவும் (Processing Fees) வசூலிக்கின்றன.
தனிநபர் கடன்கள் என்பவை எவ்விதப் பிணையமும் இல்லாத ‘அன்-செக்யூர்டு’ (Unsecured) கடன்கள் என்பதால், வங்கிகள் இதில் கூடுதல் கவனத்துடன் இடர் மேலாண்மை செய்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வட்டி விகித மாற்றங்களால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க ‘நிலையான வட்டி விகித’ (Fixed Rate Loans) முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். இது மாதத் தவணையில் (EMI) நிலையான தன்மையை உறுதி செய்கிறது. மொத்தத்தில், 2025-ம் ஆண்டு கடனில் இருந்தவர்களுக்கு வட்டிச் சுமையைக் குறைத்ததோடு, புதிய கடன் வாங்குவோருக்குச் சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.



