சமையலறையில் விறகு அடுப்புகள் மறைந்து, இன்று கேஸ் சிலிண்டர்கள் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. ஆனால், கையாளுதலில் ஏற்படும் சிறு கவனக்குறைவு கூட மிகப்பெரிய விபத்துகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, இல்லத்தரசிகளும் சமையலறை பணியில் ஈடுபடுவோரும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை இங்கே காண்போம்.
சிலிண்டர் பராமரிப்பு : கேஸ் சிலிண்டரை எப்போதும் நேராக நிமிர்த்தி மட்டுமே வைக்க வேண்டும்; இடவசதி கருதி ஒருபோதும் சாய்வாகவோ அல்லது படுக்கை வசத்திலோ வைக்கக் கூடாது. சிலிண்டர் இருக்கும் இடம் போதுமான காற்றோட்டம் உள்ளதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்பம் தரும் இதர சாதனங்கள் அல்லது மின்சாரப் பொருட்களுக்கு அருகில் சிலிண்டரை வைக்காமல் தள்ளி வைப்பதே பாதுகாப்பானது. அதேபோல், கேஸ் அடுப்பானது சிலிண்டரை விட சற்று உயரமான தளத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது எரிவாயு சீராக செல்ல உதவும்.
ஆடை மற்றும் ரப்பர் குழாய் பாதுகாப்பு : சமையலறையில் பணியாற்றும் போது நாம் அணியும் ஆடைகள் குறித்து அதிக கவனம் தேவை. நைலான் அல்லது பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளால் ஆன துணிகள் மிக எளிதாக தீப்பற்றக் கூடியவை. எனவே, நீண்ட நேரம் சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது. தளர்வான சேலைகள் அல்லது துப்பட்டாக்கள் அணியும் போது அவை நெருப்பிற்கு அருகில் செல்லாதவாறு கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் குழாயை முறையாக பராமரிக்க வேண்டும். சாதாரணக் குழாய்களை விட தரமான பாதுகாப்பு குழாய்களைப் பயன்படுத்துவது நல்லது. குழாயில் லேசான விரிசலோ அல்லது தேய்மானமோ தெரிந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும். பொதுவாக ரப்பர் குழாய்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது பாதுகாப்பை உறுதி செய்யும்.
எரிவாயு கசிவை எப்படி கையாளுவது..? சமையல் முடிந்தவுடன் அடுப்பின் சுவிட்ச் மற்றும் சிலிண்டரின் ரெகுலேட்டர் ஆகிய இரண்டையும் அணைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு உறங்க செல்வதற்கு முன் இதை ஒருமுறை சரிபார்ப்பது அவசியம். ஒருவேளை சமையலறையில் எரிவாயு கசிவு ஏற்படுவது போன்ற வாசனை வந்தால், பதற்றமடையாமல் சிலிண்டரின் ரெகுலேட்டரை உடனடியாக அணைக்க வேண்டும்.
அந்தச் சூழலில் மின்சார சுவிட்சுகளை ஆன் செய்யவோ அல்லது ஆஃப் செய்யவோ கூடாது; ஏனெனில் சிறு மின்சார தீப்பொறி கூட மிகப்பெரிய வெடிப்புக்குக் காரணமாகிவிடும். கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். எரியும் விளக்குகள் அல்லது செல்போன் டார்ச் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
வழக்கமான சோதனைகள் அவசியம் : கேஸ் ஏஜென்சி மூலம் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்குகளை கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுப்பு மற்றும் ரெகுலேட்டரை சரிபார்ப்பது அவசியம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் சுயமாக சரிபார்க்க முயலாமல், உடனடியாக எரிவாயு நிறுவனத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். சமையலறையில் நாம் காட்டும் விழிப்புணர்வோ நம் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கான கேடயம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.



