தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், வன்னியர் சமூக வாக்குகளை மையப்படுத்தி புதிய அரசியல் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் மகள் குரு விருதாம்பிகை, புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது புதிய கட்சிக்கு ‘ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 9-ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்ட பேரணியுடன் கட்சியின் தொடக்க விழா நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வருகை குறித்துப் பேசிய விருதாம்பிகை, வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக இதுவரை யாரும் ஆக்கப்பூர்வமான எதையும் செய்யவில்லை என்றும், சமூக நீதியையே தனது கட்சியின் பிரதான கொள்கையாக கொண்டு செயல்படப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைமை மீது மிகக் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் கொள்கைகளை தளர்த்திவிட்டுத் தனது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸுக்காக தனது நிலையை மாற்றிக்கொண்ட ராமதாஸ், எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், பாமகவில் தற்போது ஒற்றுமை என்பது துளியும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது புதிய கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக இருப்பதால், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அல்லது யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று விருதாம்பிகை கூறியுள்ளார்.



