2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது..
இந்த சூழலில் இன்று அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.. சென்னை பசுவை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அன்புமணி அவரை நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – பாமக தலைவர் அன்புமணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய இபிஎஸ் “ அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.. தற்போது எங்கள் கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துள்ளது.. மேலும் சில கட்சிகள் விரைவில் எங்க கூட்டணியில் இணைய உள்ளன.. இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக – பாமக கூட்டணி. எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. அதற்கு எங்கள் கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாஜக, பாமக மூன்றும் இணைந்து தேர்தலில் செயல்பட்டு வெற்றி பெறுவோம்.. பாமக உடனான தொகுதிகள் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்து விட்டோம்.. இதுகுறித்து பின்னர் அறிவிப்போம்.. திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்.
பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது என்று அன்புமணி தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ 2026 தேர்தலுக்கு பாமக அதிமுக கூட்டணியில் அமைந்துள்ளது.. இது வலுவான கூட்டணி.. மக்கள் விரோத, ஊழல், பெண்களுக்கு எதிரான, அத்தனை உழைக்கும் வர்க்கத்தினருக்கும் எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.. திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்.
Read More : Breaking : அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக! எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது? பரபரக்கும் தேர்தல் களம்..!



