தமிழ்நாட்டில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கு வாழ்வா சாவா போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தொடர் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
இதற்காக, தேசிய கட்சியான பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் இணக்கமான உறவைப் பேணி வரும் எடப்பாடி பழனிசாமி, தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தாலும், அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் மாற்றுக் கட்சியினரை அதிமுக-வில் இணைக்கும் படலத்தை எடப்பாடி பழனிசாமி முடுக்கிவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாபெரும் இணைப்பு விழா நடைபெற்றது. ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாமக்கல்லை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அதிமுக தனது இருப்பை பலமாகப் பதிவு செய்துள்ளது. அங்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் முன்னிலையில், மாற்று முகாம்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுக-வில் இணைந்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த இணைப்பு சம்பவங்கள், தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக-வின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் இந்த எழுச்சி, வரவிருக்கும் 2026 பொதுத்தேர்தலில் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : இனி தங்கத்தை போலவே வெள்ளிக்கும் ஹால்மார்க் முறை கட்டாயம்..! மத்திய அரசு முக்கிய முடிவு..!



