டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்ப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதாக டென்மார்க்கின் உள்ளூர் நாளிதழான தெரிவித்துள்ளது. அந்த உத்தரவில், டென்மார்க்கு நிலப்பகுதிக்கு வெளிநாட்டு படைகள் அச்சுறுத்தலாக நுழைந்தால், “முன்னதாகவே சுட்டுத் தாக்க வேண்டும்; மேலதிகாரிகளின் ஆணையை காத்திருக்கத் தேவையில்லை” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, கிரீன்லாந்து தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் காரணமாக டென்மார்க்கு பாதுகாப்பு நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியதாக பார்க்கப்படுகிறது.
1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த உத்தரவு உருவாக்கப்பட்டது. 1940 ஏப்ரலில் நாசி ஜெர்மனி டென்மார்க்கை தாக்கியபோது அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது தான் அதற்கு காரணம். அந்த தாக்குதலின் போது கட்டளை, தொடர்பு முறைகள் சிதைந்ததால், மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, “வெளிநாட்டு படைகள் டென்மார்க்கு நிலப்பகுதியில் நுழைந்தால், மேலதிகாரிகளின் ஆணையை காத்திருக்காமல் உடனே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்” என்ற உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவு இன்றும் நடைமுறையில் உள்ளது.
கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தேவையானால் படைபலத்தை பயன்படுத்தியும் அதை கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்கள் அந்த ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் இயங்குவதால், கிரீன்லாந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
“கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை” – டென்மார்க்
இதற்கு பதிலாக, டென்மார்க்கும் கிரீன்லாந்தும், அந்த நிலம் விற்பனைக்கு இல்லை என்று பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன. டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், கிரீன்லாந்தை ராணுவ பலத்தால் கைப்பற்ற முயற்சிப்பது நட்டோ (NATO) அமைப்பின் முடிவாகும் என்று எச்சரித்தார்.
“அமெரிக்கா மற்றொரு நட்டோ நாட்டை ராணுவமாக தாக்க முடிவு செய்தால், அப்போது எல்லாமே முடிவடையும்,” என்று அவர் டென்மார்கின் TV2 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
வாஷிங்டனில் டென்மார்க்–கிரீன்லாந்து தூதர்கள் முயற்சி
இதனிடையே, டிரம்பின் ‘கிரீன்லாந்தை கைப்பற்றும்’ மிரட்டலிலிருந்து அவர் பின்வாங்க வேண்டும் என்பதற்காக, டென்மார்க்கு மற்றும் கிரீன்லாந்து தூதர்கள் வாஷிங்டனில் தீவிர முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.
டென்மார்க்கின் தூதர் ஜெஸ்பர் மோலர் சோரென்சன் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதி ஜேகப் இஸ்போசெத்சன் ஆகியோர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். மேலும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, டிரம்பை இந்த முடிவில் இருந்து விலக வைக்க உதவி கோரியுள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் டென்மார்க்கு அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
“குத்தகை போதாது, உரிமை வேண்டும்” – ட்ரம்ப்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், “கிரீன்லாந்தை முழுமையாக உரிமையாக வைத்திருக்க வேண்டும்; வெறும் ஒப்பந்தம் அல்லது குத்தகை போதாது” என்று கூறினார்.
1951ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், டென்மார்க்கு மற்றும் கிரீன்லாந்தின் அனுமதியுடன் அங்கு ராணுவ தளங்கள் அமைக்க அமெரிக்காவிற்கு உரிமை உள்ளது. ஆனால் அதில் திருப்தி இல்லை என்றும், முழு உரிமை பெற்றால் மட்டுமே அதனால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“ட்ரம்ப்-ஐ ஐரோப்பா தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” – ஜே.டி. வான்ஸ்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பின் பேச்சை அலட்சியப்படுத்தாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். “அந்த நிலப்பகுதியின் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால், அமெரிக்கா தானே ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்,” என அவர் எச்சரித்தார்.
கிரீன்லாந்து
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் 80 சதவீதம் உள்ள கிரீன்லாந்தில், சுமார் 56,000 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் இனுயிட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



