51 ஆண்டுகளில் முதன்முறையாக தோன்றிய அமெரிக்காவின் ‘அழிவு நாள் விமானம்’..! அதன் முக்கியத்துவம் என்ன?

us doomsday plane

அமெரிக்காவின் மிக உயர்ந்த ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் “அழிவு நாள் விமானம்” (Doomsday Plane) எனப்படும் விமானம், இந்த வாரம் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முன் தோன்றியது. இது, அணு யுத்தம் போன்ற பேரழிவுகளையும் தாங்கும் வகையில், பனிப்போர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட வான்வழி கட்டுப்பாட்டு மையமாகும்.


இந்த விமானம் Boeing E-4B Nightwatch என அழைக்கப்படுகிறது. அது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியது. இது, அதன் 51 ஆண்டுகள் சேவைக் காலத்தில் மிக அரிதான, வெளிப்படையான பயணமாக கருதப்படுகிறது.

ஏன் இந்த விமானம் LAX-ல் இறங்கியது?

இந்த விமானம் வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்குவது பதிவாகியுள்ளது. இது நடந்த நேரத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு உலக அரசியல் சூழ்நிலை மிகவும் பதற்றமாக இருந்தது. அதனால் சமூக ஊடகங்களில் பலரும் குழப்பம் அடைந்தனர்.

ஒருவர், “அணு ஆயுத போருக்காக உருவாக்கப்பட்ட அழிவு நாள் விமானம் LAX-க்கு வந்துவிட்டது” என்று பதிவிட்டார்.. மற்றொருவர், “இன்று அழிவு நாள் விமானம் LAX-ல் இறங்கியுள்ளது – இதற்கு என்ன அர்த்தம்?” என்று பதிவிட்டார்.

விமானத்தில் யார் பயணம் செய்தனர்?

அமெரிக்க பாதுகாப்புத் துறை இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், அரசியல் செயற்பாட்டாளர் லாரா லூமர் இருவரும் இந்த விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவசர நிலை இல்லை – ஆனால் தொடரும் சந்தேகம்

இதுவரை எந்தவிதமான அவசரநிலையும் அறிவிக்கப்படவில்லை. X தளத்தின் AI கருவியான Grok இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்தது.. அதில் “இந்த E-4B விமானம் மிக கடுமையான சூழ்நிலைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 8 அன்று LAX-ல் இறங்கியது என்பது சாதாரண பயணமாகத் தெரிகிறது. விமானப்படையோ அல்லது வெள்ளை மாளிகையோ எந்த அவசர அறிவிப்பும் செய்யவில்லை.” என்று தெரிவித்திருந்தது..

இந்த விமானம் முதலில், நெப்ராஸ்காவின் ஆஃபுட் விமான படை தளத்தில் இருந்து, மேரிலாண்ட் மாகாணத்திற்கு வந்து, அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாக கண்காணிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த உயர்தர ரகசிய விமானம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பெண்டகன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

‘அழிவு நாள் விமானம்’ என்றால் என்ன?

Boeing E-4B Nightwatch என்பது மிகவும் மாற்றியமைக்கப்பட்ட Boeing 747-200 விமானம். இது, நிலத்திலுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் அழிந்தாலும் கூட, அமெரிக்க அரசு இயங்கிக்கொண்டிருக்க உருவாக்கப்பட்டது. இது தேசிய வான்வழி செயல்பாட்டு மையமாக (NAOC) செயல்படுகிறது.. அணு தாக்குதல், பெரும் பயங்கரவாத தாக்குதல், அல்லது தேசிய பேரழிவுகள் நேர்ந்தால் கூட அரசை வழிநடத்த இது பயன்படும்.

மின்காந்த அதிர்ச்சி (EMP), அணு கதிர்வீச்சு, கடுமையான போர் சூழ்நிலைகள் ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.. உலகின் எந்த மூலையிலிருந்தும் இராணுவத்தை கட்டுப்படுத்தும் மிக ரகசிய தொடர்பு அமைப்புகள் இந்த விமானத்தில் உள்ளன.. இது, அமெரிக்காவின் அணுசக்தி கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு (NC3) அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.

எத்தனை விமானங்கள்? எங்கே இருக்கும்?

முதலில் E-4A எனும் வடிவில் 1970களில் உருவாக்கப்பட்டது. தற்போது 4 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. அனைத்தும் ஆஃபட் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.. குறைந்தபட்சம், ஒரு விமானம் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்படும்.

விமானத்தின் உள்ளே என்ன இருக்கிறது?

இந்த விமானத்தில் பாதுகாப்புத் துறை தலைவர்கள், உளவுத்துறை அதிகாரிகள், தொடர்பு நிபுணர்கள் என அதிகபட்சம் 111 பேர் பயணம் செய்யலாம். இந்த விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும்.. அதனால் நீண்ட நேரம் பறக்க முடியும். எரிபொருள் நிரப்பாமல் கூட சுமார் 12 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது..

விமானத்தின் மேல் பெரிய எரிபொருள் நிரப்பும் குவிமாடம் இருப்பதால் இது உடனே அடையாளம் காணப்படும். விமானத்தின் பின்னால் இருக்கும் தனிச்சிறப்பு அமைப்பில்
உலகம் முழுவதும் இராணுவத்துடன் தொடர்பு கொள்ளும் குறியாக்கப்பட்ட கருவிகள் உள்ளன. இந்த விமானம் பொதுமக்கள் பார்வைக்கு வந்தது, உலக அரசியல் சூழ்நிலை பதற்றமாக இருக்கும் நேரத்தில் நடந்ததால், உலகம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இதற்கு ‘அழிவு நாள் விமானம்’ என்று பெயர் வந்தது?

அணு ஆயுதப் போர் போன்ற, உலக முடிவை நினைவூட்டும் மிக மோசமான சூழ்நிலைகளிலும் அரசை இயக்க வைக்கும் விமானம் என்பதால் இதற்கு அழிவுநாள் விமானம் என்ற பெயர் வந்தது.. அணு வெடிப்புகள், மின்காந்த அதிர்வுகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட அமைப்புகள் இதற்குள் உள்ளதால்,
நிலத்திலுள்ள அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் செயலிழந்தாலும் கூட,
அமெரிக்க அரசு இந்த விமானத்திலிருந்து இராணுவத்தை கட்டுப்படுத்த முடியும்.

இந்த விமானம் ஒரே ஒரு முறை மட்டுமே உண்மையான அவசர நிலைக்கு பயன்படுத்தப்பட்டது. 2001 செப்டம்பர் 11 அன்று நடந்த உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.. மற்ற நேரங்களில் இது அடிக்கடி பயிற்சி பறப்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

விமானத்தின் உள்ளமைப்பு

விளக்கக் கூட்ட அறைகள், கட்டளை மையங்கள், தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ஓய்வுப் பகுதிகள் ஆகியவை அடங்கும். இதில் 100க்கும் மேற்பட்டோர் தங்கும் வசதி உள்ளது. உலகம் முழுவதும் எந்த இடத்திலும் தடையில்லாமல் தொடர்பு கொள்ள மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

யார் இதனை இயக்குகிறார்கள்?

இந்த விமானம் பணி கூட்டுப் படைத் தளபதிகளால் வழிநடத்தப்படுகிறது.. அமெரிக்க மூலோபாயக் கட்டளையின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. விமானப் படை உலகளாவிய தாக்குதல் கட்டளை, விமானப் பணியாளர்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்கிறது.

பொதுமக்கள் பார்வையில் அரிதான காட்சி

1970களிலிருந்து செயல்பட்டு வரும் இந்த விமானம், மிக ரகசிய பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், பொதுமக்கள் பார்வைக்கு வருவது மிகவும் அரிது. அதனால் தான், இந்த வாரம் இது பல நகரங்களில் தோன்றியபோது, அமெரிக்காவிலும் உலகளாவிய அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த விமானம் வாஷிங்டனுக்கு அருகில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அரசு தனது “அரசுத் தொடர்ச்சி திட்டங்களை” மீண்டும் தீவிரமாக கவனிக்கத் தொடங்கியதற்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.

RUPA

Next Post

அடுத்த ஷாக்..! ஒடிசாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து; 6 பேர் காயம்..!

Sat Jan 10 , 2026
ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]
odisha plane crash

You May Like