தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, உடலை டிராக்டர் மண் கொண்டு மூடி மறைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபு என்பவரது மனைவி ராஜேஸ்வரி (30), தனது கணவரின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் பழகி வந்த நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது.
ராஜேஸ்வரிக்கும் அனுமந்தனுக்கும் இடையிலான பழக்கம் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டு பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியை பழிவாங்கத் துடித்துள்ளார். நேற்று மதியம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற ராஜேஸ்வரியை வழிமறித்த அனுமந்தன், கடைசியாக சில விஷயங்கள் பேச வேண்டும் எனக் கூறி கல்லுகொல்லைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, கண் இமைக்கும் நேரத்தில் ராஜேஸ்வரியை குழிக்குள் தள்ளி, அவர் தலை மீது பெரிய கல்லைப் போட்டு அனுமந்தன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக தான் ஏற்கனவே திட்டமிட்டுத் தயாராக வைத்திருந்த டிராக்டரில் இருந்த கட்டிட கழிவு மண்ணைக் குழிக்குள் கொட்டி உடலை மூடிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அந்தப் பகுதியில் அனுமந்தனின் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கவனித்த விவசாயிகள், உடனடியாக இண்டூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது ராஜேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அனுமந்தன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜேசிபி ஆப்ரேட்டர் ஜெகன் (25) ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
Read More : தமிழ்நாட்டில் உருவானது புதிய அரசியல் கட்சி..!! இதுதான் எங்கள் நோக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!



