கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள், கரூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என பலேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது..
இதை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.. அதன்படி இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
காலை 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்குள் சென்ற விஜய் விசாரணை முடிந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டார்.. விசாரணை சுமார் 4 மணி நேரம் மட்டுமே நடந்தாலும், விஜய் கூறிய எழுத்துப்பூர்வ பதிலில் கையெழுத்து பெறுவதற்காக 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தார்.. சுமார் 7 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் இருந்த விஜய் பின்னர் ஆதவ் அர்ஜுனா உடன் காரில் புறப்பட்டு சென்றார்.
இன்றைய விசாரணையில் விஜய்யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.. குறிப்பாக சம்பவம் நடந்த உடனேயே நீங்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது ஏன்? கால தாமதம் ஆனதற்கான காரணத்தை காவல்துறையிடம் கூறினீர்களா? உள்ளிட்ட பல கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்தனர்..
இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்கள், முறைப்படி தட்டச்சு செய்யப்பட்டு, நகல் எடுக்கப்பட்டு, விஜய்யிடம் உறுதி செய்ய கையெழுத்து பெறப்பட்டது.. இன்றைய தினம் விசாரணை முடிவடைந்த நிலையில் நாளைய தினமும் விஜய்யிடம் விசாரணை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே 2-வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார் என்று கூறப்பட்டது..
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய்யிடம் நாளை சிபிஐ விசாரணை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய், விசாரணைக்கு விலக்கு கோரிய நிலையில் அதனை சிபிஐ ஏற்றுக்கொண்டது.. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு விஜய் ஆஜராக அனுமதி வழங்கி உள்ளது.
Read More : ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு..! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..! அதிர்ச்சியில் படக்குழு..!



