தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த 4 நாட்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் கடைசி நாள் ஆன இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .
இந்நிலையில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரையில் இருந்து சுற்றுலா வந்த குழுவை சார்ந்த 3 நபர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரை மாவட்டம் எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 20 நபர்கள் ஈஷா மையத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஈசா யோகா மையத்தை சுற்றி பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் தாராபுரம் அருகே அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது ஹரி (16), பாக்கியராஜ் (39) மற்றும் சின்ன கருப்பு (31) ஆகியோர் ஆற்றில் மூழ்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி இறந்த 3 நபர்களின் உடல்களையும் வீட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காணும் பொங்கல் தினத்தில் சுற்றுலா சென்ற 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.