மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் என்பவர், திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகள் சிம்யாவிற்கும், சக தொழிலாளி பிரேம்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சிம்யாவிற்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தந்தை ஆறுமுகத்திற்குத் தெரியவரவே, அவர் தனது மகளை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், தந்தையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத சிம்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் மாயமாகியுள்ளார். இது குறித்துப் புகாரைப் பெற்ற வீரபாண்டி போலீசார், தீவிரத் தேடுதலுக்குப் பிறகு கன்னியாகுமரியில் தனது இன்ஸ்டாகிராம் நண்பருடன் இருந்த சிம்யாவை மீட்டு வந்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வீட்டிற்கு வந்த பின்னரும் சிம்யாவின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று தந்தை ஆறுமுகம், தனது மகளுக்கு மீண்டும் அறிவுரை கூற முற்பட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. தனது பேச்சை கேட்காமல் மகள் விதண்டாவாதம் செய்ததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆறுமுகம், கத்தியால் சிம்யாவின் கழுத்தை அறுத்தும், நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சரமாரியாக குத்தியும் படுகொலை செய்துள்ளார்.
வேலைக்கு சென்றிருந்த ஆறுமுகத்தின் மனைவி வீடு திரும்பியபோது, மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார். பின்னர், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சிம்யாவின் சடலத்தை கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆறுமுகம், தனது வாக்குமூலத்தில், “மகள் கள்ள உறவிற்காக வீட்டை விட்டு ஓடியது சமூகத்தில் தங்களுக்குப் பெரிய அவமானத்தைத் தந்தது என்றும், பலமுறை சொல்லியும் கேட்காததால் ஆத்திரத்தில் அவளைக் கொன்றேன்” என்றும் திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளப் மோகத்தால் ஏற்பட்ட இந்த துயரம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



