வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெரிய பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற மேளக் கலைஞர் செய்த இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜித்குமார், அப்பகுதியில் வசிக்கும் 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மது குடிப்பதற்குச் செலவுக்குப் பணம் கேட்டு அவர் மூதாட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. மூதாட்டி பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மூதாட்டியைத் தாக்கிவிட்டு, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் மூதாட்டி மயக்கமடையவே, அவர் இறந்துவிட்டதாக பயந்து அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
மறுநாள் காலை, மூதாட்டியின் வீடு நீண்ட நேரமாக திறந்தே கிடப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அண்டை வீட்டார்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மூதாட்டி காயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரது மகனுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக மீட்கப்பட்ட மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பிய மூதாட்டி, தொடர்ந்து ஒருவித அச்சத்திலேயே இருந்துள்ளார். அவரது நடத்தையில் மாற்றத்தைக் கண்ட மகன் பொறுமையாக விசாரித்தபோதுதான், நடந்த கொடூரத்தை சொல்லி மூதாட்டி கதறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மூதாட்டி மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் அறிவுறுத்தலின்படி, ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : பக்கா பிளானோடு களமிறங்கிய விஜய்..!! யாருடன் கூட்டணி..? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!



