வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் விரைவாக கிடைக்க புதிய நடைமுறையை வருவாய் துறை பரிசீலித்து வருகிறது. முழு விவரங்கள் இங்கே.
வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக பெறும் வகையில், வருவாய் துறை நிர்வாக நடைமுறையில் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், சான்றிதழ்கள் வழங்கப்படும் காலம் கணிசமாக குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள், கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதல் திருமணச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவை அவசியமாகின்றன.
தற்போது நடைமுறையில் பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கின்றனர். அதன் பிறகு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் ஆய்வாளர் (RI), பின்னர் தலைமையிடத்து துணை தாசில்தார் அல்லது தாசில்தார் ஆகியோரின் ஆய்வுக்குப் பிறகே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் புதிய மாற்றமாக வருவாய் துறை மேற்கொண்டுள்ள ஆய்வின்படி, எஸ்.சி., மற்றும் எஸ்.டி. அல்லாத பிற சமூகங்களுக்கான ஜாதிச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் திருமணச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றில் வருவாய் ஆய்வாளரின் ஆய்வை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், கிராம நிர்வாக அலுவலரின் சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பம் நேரடியாக தலைமையிடத்து துணை தாசில்தாரிடம் அனுப்பப்படும். இதனால் சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்படும் வாய்ப்பு உருவாகும். மேலும் தானியங்கி பட்டா மாறுதல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டதைப் போலவே, சான்றிதழ் வழங்கும் செயல்முறையிலும் நவீன மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என வருவாய் துறை தெரிவித்துள்ளது.
Also Read:திமுக கூட்டணியில் இல்லை; தவெக கூட்டணி அமைந்தால் இணைவோம்: விசிக கட்சி தலைவர் திருமாவளவன்..



