தமிழ்நாட்டில் நிலவி வரும் போலிப் பத்திரப் பதிவு மற்றும் சொத்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அந்தச் சொத்தின் ‘அசல் ஆவணங்களை’ (Original Documents) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் முறைகேடாக பட்டா மாறுதல் செய்வது போன்ற புகார்களைத் தவிர்க்க இந்த சட்டம் ஒரு வலுவான அரணாக அமையப்போகிறது.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு சொத்தைப் பதிவு செய்ய விரும்பும் நபர், அந்த சொத்தின் முந்தைய அசல் உரிமை ஆவணம் மற்றும் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ் (EC) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சார்-பதிவாளர் அந்தப் பதிவை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படும்.
இந்த மசோதா கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது கிடைத்துள்ள இந்த பச்சைக்கொடி, தமிழக பதிவுத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை பதிவு செய்யப்பட வேண்டியது பூர்வீக சொத்தாக இருந்து, அதற்கான அசல் ஆவணங்கள் கைவசம் இல்லை என்றால், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட பட்டா ஆவணத்தை சான்றாகச் சமர்ப்பிக்கலாம். அதேபோல், அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அது குறித்து நாளிதழில் விளம்பரம் செய்திருக்க வேண்டும் மற்றும் காவல்துறையிடம் இருந்து கண்டறிய இயலவில்லை (Non-traceable certificate) என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய மாற்று ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அசல் ஆவணம் இல்லாத பட்சத்தில் பதிவு அனுமதிக்கப்படும். இதன் மூலம் சொத்து வாங்குபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், நீண்ட கால சட்டச் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
Read More : அரசின் இந்த திட்டத்தில் ரூ. 78,000 மானியம் பெறலாம்..! இதை செய்தால், மேலும் ரூ.1,50,000 கிடைக்கும்!



