கூகுள் நிறுவனத்தின் குரல் உதவி அமைப்பான Google Assistant, சில நேரங்களில் பயனர்கள் அறியாமலேயே செயல்பட்டு, அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பதிவு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை முடிக்க Google நிறுவனம் 68 மில்லியன் டாலர் (சுமார் ரூ.570 கோடி) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
“Hey Google” அல்லது “Okay Google” என்று சொல்லாத போதும், Google Assistant தவறுதலாக செயல்பட்டு, வீட்டிலும் அலுவலகத்திலும் நடந்த தனிப்பட்ட பேசுகைகளை பதிவு செய்ததாக பயனர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடல்கள், பின்னர் பயனர்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை காட்ட பயன்படுத்தப்பட்டதாக பலர் தெரிவித்தனர். தாங்கள் பேசிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு விளம்பரங்கள் வந்தபோது தான் இது நடந்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை Google மறுத்தாலும், நீண்ட சட்டப்போராட்டம் வேண்டாம் என்பதற்காக இந்த சமரசத்திற்கு ஒப்புக்கொண்டது. இதற்கு நீதிமன்ற ஒப்புதல் இன்னும் கிடைக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம், 2016 மே 18 முதல் கூகுள் சாதனங்களை வாங்கியவர்கள் அல்லது Google Assistant தவறுதலாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பொருந்தும். நீதிமன்ற ஆவணங்களின்படி, ஒரு பயனர் அதிகபட்சம் மூன்று கூகுள் சாதனங்களுக்கு இழப்பீடு கோர முடியும். ஒருவருக்கு கிடைக்கும் இறுதி தொகை, எத்தனை பேர் கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
இதுபோன்றே, ஆப்பிள் சிரி ( Apple Siri) தொடர்பாகவும் ஒரு வழக்கு நடந்தது. அதில் Apple நிறுவனம் சமீபத்தில் பணம் செலுத்த ஒப்புக் கொண்டது. 2024 டிசம்பரில் ஆப்பிள் , 95 மில்லியன் டாலர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது. தற்போது, ஆப்பிள் பயனர்கள் ஒருவருக்கு 8 முதல் 40 டாலர் வரை இழப்பீடு பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் நமது தனிப்பட்ட பேச்சுக்கள் உண்மையில் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி உள்ளது..
Read More : முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கி.மீ. பயணம்..! டொயோட்டாவின் முதல் எலக்ட்ரிக் கார்..! விவரம் இதோ..!



