தமிழ்நாட்டில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ குறித்த முக்கிய தரவுகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தச் சமூக நலத்திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) மட்டும் சுமார் 117 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 130 பெண்கள் பயனடைந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதிக்கேற்ப வழங்கப்படும் நிதியுதவி இத்திட்டத்தின் சிறப்பம்சமே, மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் தங்க நாணயம் ஆகும். பயனாளிகளின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இந்த உதவி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி அல்லாத பெண்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் 15,000 ரூபாய் நேரடியாக வங்கித் தவனையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் (NSC) அளிக்கப்படுகிறது. அதேபோல், பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு (Diploma) முடித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 30,000 ரூபாய் வங்கி மூலமாகவும், 20,000 ரூபாய் சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படுகிறது.
தங்க நாணயம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை நிதி உதவியுடன் சேர்த்து, இரு பிரிவினருக்கும் திருமாங்கல்யத்திற்காக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்த பிறகு, தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு தொகை மாற்றப்படும்.
Read More : அமாவாசை, பௌர்ணமியில் முன்னோர்களுடன் பேசும் ரகசிய மலை..!! தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிவன் கோயிலா..?



