ஈரானில் மனித உரிமைப் போராளியும், நோபல் அமைதி பரிசு பெற்றவருமான நர்கீஸ் மொஹம்மதிக்கு மேலும் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், எந்தவித எதிர்ப்பையும் ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது.
குற்றச்சாட்டுகள் மற்றும் விதிக்கப்பட்ட தண்டனை
நர்கீஸ் மொஹம்மதியின் வழக்கறிஞர் மோஸ்தஃபா நீலி, AFP செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, “குற்றச் செயல்களைச் செய்ய கூட்டணி அமைத்ததாகவும், கூடி திட்டமிட்டதாகவும் கூறி, அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரச்சார குற்றச்சாட்டு மற்றும் உள்ளூர் நாடுகடத்தல்
அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டில், ஒரு ஆண்டு ஆறு மாதங்கள் (1.5 ஆண்டு) சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் கிழக்கு பகுதியான தென் கொராசான் மாகாணத்தில் உள்ள ‘கோஸ்ஃப்’ (Khosf) என்ற நகருக்கு, இரண்டு ஆண்டுகள் உள்ளூர் நாடுகடத்தல் (Internal Exile) செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் சட்டத்தின் படி, ஒருவருக்கு பல சிறைத் தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும்.அதனால், தண்டனைகள் சேர்த்து கணக்கிடப்படுவதில்லை.
நர்கீஸ் மொஹம்மதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக தற்காலிகமாக பிணையில் விடுவிக்கப்படுவார் என்று நம்புவதாக வழக்கறிஞர் நீலி தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல,
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
25 ஆண்டுகளாக தொடரும் கைது மற்றும் சிறை வாழ்க்கை
53 வயதான நர்கீஸ் மொஹம்மதி, பெண்களுக்கு கட்டாயமாக விதிக்கப்படும் உடைச் சட்டத்துக்கும், ஈரானின் மரண தண்டனை முறைக்கும் எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக, பலமுறை கைது செய்யப்பட்டும், நீதிமன்ற விசாரணைகளையும் சிறைத் தண்டனைகளையும் சந்தித்து வந்துள்ளார்.
குழந்தைகளை பார்க்க முடியாத நிலை
கடந்த ஒரு தசாப்தமாக அவர் பெரும்பாலும் சிறையிலேயே உள்ளார். பாரிஸில் வசிக்கும் தனது இரட்டை குழந்தைகளை, 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நேரில் பார்க்க முடியவில்லை.
2024 டிசம்பர் மாதத்தில், கட்டியை அகற்றிய அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மாற்று சிகிச்சை காரணமாக ஏற்பட்ட உடல்நிலையை கருத்தில் கொண்டு, மூன்று வாரங்களுக்கு மருத்துவ காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
சிறையில் இருந்தபோதும், நர்கீஸ் மொஹம்மதி அமைதியாக இருக்கவில்லை. சிறை வளாகத்தில் போராட்டங்களை நடத்தியும், பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
நோபல் அமைதி பரிசு – 2023
2023 ஆம் ஆண்டு, ஈரானில் மரண தண்டனைக்கு எதிரான அவரது நீண்டகால போராட்டத்தை அங்கீகரித்து, நர்கீஸ் மொஹம்மதிக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் சிறையில் இருந்ததால், அவரது குழந்தைகளே அந்த பரிசை பெற்றுக்கொண்டனர்.
மனித உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டு
அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறுவதாவது,
சீனாவைத் தவிர, ஆண்டுதோறும் அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது. சீனாவைப் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் கிடைக்காததால், அந்த எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : “ எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்..” யுரேனியம் செறிவூட்டல்.. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை..!



