தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியாற்றும் முக்கிய மக்கள் நலத் திட்டமாக விளங்கி வரும் அம்மா உணவகங்களை முழுமையாக புதுப்பித்து, தரமான உணவு வழங்கும் வகையில் சீரமைக்க தமிழக முதலமைச்சர் விஜய் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீப காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களும் போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்கப்பட உள்ளன. இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 383 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கீழ் 237 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் புதிய உத்தரவின்படி, அனைத்து உணவகங்களிலும் புதிய நவீன சமையல் உபகரணங்கள் உடனடியாக வாங்கப்பட உள்ளன. பழுதடைந்த சமையலறைகள், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முழுமையாக மேம்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக, சமையலறைகள் நவீனமயமாக்கப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவையைத் தொடர்ந்து கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
அதேபோல், உணவுகளை விரைவாகவும் சுகாதாரமாகவும் சமைக்க புதிய சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பிற நவீன உபகரணங்களும் தங்குதடையின்றி வழங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீரமைப்பு பணிகளுக்கான செலவினங்களை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தங்களது “பொது நிதியிலிருந்து” நேரடியாக மேற்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமடைவதற்கான வாய்ப்பு இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, தவெக அரசு பொறுப்பேற்ற பின் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ககன்தீப் சிங் பேடி நிலம் முழுவதும் இந்த மறுசீரமைப்பு பணிகளை நேரடியாக கண்காணிப்பார் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read more: ஆதார் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்..! இதற்கான காலக்கெடு மேலும் நீட்டிப்பு..!



