தமிழக அரசியலில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான போராட்டத்தை எதிர்கொண்டு நிற்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடியை பயன்படுத்த தடை என அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்த போதிலும், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற பெயரில் அவர் நடத்தி வரும் சட்டப் போராட்டம் இன்னும் ஓயவில்லை.
சமீபகாலமாக ஓபிஎஸ் தரப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுக, எடப்பாடி தரப்பு அதிமுக மற்றும் விஜய்யின் தவெக என மாற்று முகாம்களுக்கு தாவி வருவது அவருக்குப் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது அரசியல் யுத்தத்தில் அவர் சற்றும் பின்வாங்கவில்லை. எம்.ஜி.ஆர் வகுத்த கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எடப்பாடி பழனிசாமி சிதைத்துவிட்டார் என்பதே ஓபிஎஸ் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 6 முக்கிய வழக்குகள், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளாக இறுதிக்கட்ட விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பைத்தான் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் எதிர்காலத்திற்கான ஆக்ஸிஜனாக கருதுகிறார். பிப்ரவரி 10-ஆம் தேதியே இந்த தீர்ப்பு வரும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்தால், அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அதிகார மையத்தை நிலைகுலைய செய்யும். ஒருவேளை பாதகமாக அமைந்தால், அது ஓபிஎஸ்-ஸின் 40 ஆண்டுகால அரசியல் பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாகவும் அமையலாம்” என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தை முடிவதற்குள் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என ஓபிஎஸ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். வரும் 16-ஆம் தேதி வெளியாகப்போகும் நீதிமன்ற தீர்ப்பு, அதிமுகவின் அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது ஓபிஎஸ்-ஸின் அரசியல் அத்தியாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமா என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
Read More : கிரகணத்தின்போது கூட மூடப்படாத ஒரே கோயில்..!! அதிகாலை 2 மணிக்கு நைவேத்தியம்..!! இப்படி ஒரு அதிசய கோயிலா..?



