காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு சிறிதும் மதிப்பதே இல்லை என்றும், அண்டை மாநில அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி கடந்த 20 நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையம் இருமுறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார். மேலும், ஜூன் மாதத்தில் வர வேண்டிய 9.1 டி.எம்.சி தண்ணீரில் 2.1 டி.எம்.சியும், ஜூலையில் தர வேண்டிய 3.2 டி.எம்.சிக்கு பதிலாக வெறும் 0.4 டி.எம்.சி தண்ணீரும் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தரவுகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமாக ஜூன் 12-ல் திறக்கப்பட வேண்டிய அணை இதுவரை திறக்கப்படவில்லை என்றும், இதனால் குறுவை சாகுபடி முற்றிலுமாகப் பாழாகி, வரவிருக்கும் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார். கர்நாடக அணைகளில் 67 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தும், நல்லெண்ண அடிப்படையில் கூடத் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுப்பது அவர்களின் அப்பட்டமான சுயநலத்தை காட்டுகிறது என்றார்.
இத்தகையச் சூழலில், “முதலமைச்சர் விஜய் தற்போது கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ள நிலையிலும், அவர்களிடம் போய் முதலமைச்சர் விஜய் என்ன பேசப் போகிறார் என கேள்வி எழுப்பிய அன்புமணி, தீர்ப்புகளையே மதிக்காத கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் வேலை என்றும் சாடினார்.
Read More : Gift உடன் கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி..!! சாகசங்களை கண்டு ரசித்த முதல்வர் விஜய்..!!



