கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. அதே போல் திமுக அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும் தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா?
தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
Read More : மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.. பெண்களுக்கு குட்நியூஸ் சொன்ன CM ஸ்டாலின்..!



