கடந்த சில வாரங்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது, சாமானிய மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் இனி எட்டா கனியாகிவிடுமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 29 தங்கத்தின் விலை படிப்படியாகச் சரியத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறையக்கூடும் என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்பாராத விலை வீழ்ச்சிக்கு பின்னால் ரஷ்யா எடுத்துள்ள ஒரு மிக முக்கியமான பொருளாதார முடிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் புவிசார் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான அதீத மோகம் காரணமாக விலை உச்சத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்தச் சூழல் மெல்ல தணிய தொடங்கியுள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்திருப்பதாக ‘ப்ளூம்பெர்க்’ (Bloomberg) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல், உலக தங்க சந்தையை அதிர வைத்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கிச் சேமித்து வந்தன. ஆனால், இப்போது ரஷ்யா மீண்டும் டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்குத் திரும்புவது, டாலரின் மதிப்பை வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் போது, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து அதன் விலை சரிவது இயல்பானது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டாலரின் இந்த எழுச்சி இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலையை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் கொண்டு வரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.



