வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி தொடர்பு கொள்ள வேண்டுமானால், அதற்கு வாடிக்கையாளரின் முன்அனுமதி அல்லது சிறப்பு வேண்டுகோள் அவசியமாகும்.
➣ வாடிக்கையாளரின் குடும்பத்தில் நிகழும் திருமணம், துக்க நிகழ்வுகள் அல்லது மருத்துவ அவசரச் சூழல்களின் போது அவர்களைத் தொடர்பு கொண்டு கடன் கேட்டு வற்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
➣ கடன் வசூல் நடவடிக்கைகளின் போது வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையிலோ, அநாகரிகமாகவோ அல்லது மிரட்டும் தோனியிலோ பேசுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
➣ கடன் நிலுவையைச் சுட்டிக்காட்டி வாடிக்கையாளரைப் பொதுவெளியில் நிறுத்தி அவமானப்படுத்துவதோ அல்லது அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது.
➣ வாடிக்கையாளரின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைச் சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என நிதி நிறுவனங்களுக்கும் முகவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➣ கடன் வாங்கியவர் குறிப்பிடும் இடத்திற்குச் சென்று தான் வசூல் முகவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்திற்கு வராமல் அவர் ஏமாற்றும் பட்சத்தில் மட்டுமே, அவரது இல்லத்திற்கோ அல்லது பணிபுரியும் இடத்திற்கோ செல்ல அனுமதி உண்டு.
➣ நேரடி வசூலுக்குச் செல்லும் முகவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, வங்கியின் அங்கீகாரக் கடிதம் மற்றும் நோட்டீஸ் ஆகியவற்றைத் தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும்.
➣ வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள், அழைத்த நேரம் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் வங்கிகள் குறைந்தது 6 மாதங்களுக்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும்.
➣ கடன் தொகையில் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் வாங்கித் தவணை கட்டத் தவறினால், அவற்றை உடனடியாக முடக்கக் கூடாது. தவணைத் தொகை செலுத்தப்படாமல் 60 நாட்கள் கடந்த பிறகே சாதனங்களை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
➣ நிலுவைத் தொகையை வாடிக்கையாளர் செலுத்திய அடுத்த 1 மணி நேரத்திற்குள் முடக்கப்பட்ட சாதனங்களை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 250 இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன.
Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!


