அல் கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் வருடம் மே மாதம் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2011 ஆம் வருடம் ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை அந்நாட்டு அரசாங்கத்திடம் அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி செய்தியாளர்களிடம் தெரிவித்தது அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் பொதுத் தேர்தலுக்கு 5 நாட்கள் எஞ்சி இருக்கும் நிலையில் பரபரப்பான இந்த தகவலை ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்து இருக்கிறார் முன்னாள் பிரதமர் கிலானி.2008 முதல் 2012 வரை கிலானி பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்த காலத்தில் காண்டலீசா ரைஸ் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார். இந்தக் காலத்தில் நான்கு முறை பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு இருக்கிறார். அவரது சுற்றுப்பயணங்களின் போது ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக தங்களிடம் பலமுறை அச்சம் தெரிவித்ததாகவும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் கிலானி.
2008 ஆம் வருடம் இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களுக்குப் பிறகு முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் இஸ்லாமாபாத்தில் தன்னை முதல்முறையாக சந்தித்ததாக கிலானி தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதைப் பற்றி அவர் என்னிடம் தெரிவித்த போது தவறான தகவலாக இருக்கும் என்று கூறி நான் மறுத்தேன். ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அபோதாபாத்தில் பின்லேடனைக் கண்டுபிடித்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய கிலானி ” ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது குறித்து ஆதாரத்துடன் கூடிய தகவல்கள் இருந்தால் அதை பாகிஸ்தானிடம் அமெரிக்கா சமர்ப்பித்திருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உதவி இருப்போம். தீவிரவாத தாக்குதல்களால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மதிப்பு மிக்க உயிர்களை நாமும் இழந்திருக்கிறோம்.
பின்லேடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. இதோடு பாகிஸ்தானை தொடர்பு படுத்தி வெளிநாட்டு மீடியாக்கள் பேசுவதை தடுப்பதே அன்றைய நேரத்தின் தேவையாக இருந்தது. 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் பேசிய கிலானி,” அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிறகு தான் அவர் தங்கள் நாட்டில் பதுங்கி இருப்பது தெரியும் என்று உறுதியாக கூறினார். மேலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் செயல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பாக முடியாது என்றும் தெரிவித்திருந்தார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலியுறுத்தி தனது பேச்சில் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானை தீவிர நாடாக சித்தரிக்கும் ஊடகங்களின் மீது குற்றம் சாட்டினார்.