நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி, ஆற்றங்கரை அருகே தரையிறங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட 300 மீட்டர் செங்குத்தான சரிவில் விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. வாகனம் பலத்த சேதமடைந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
27 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவர்களில் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு மைனர் பெண் அடங்குவர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிறது.. எனினும் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாள ராணுவம், ஆயுதப்படை போலீஸ் படை மற்றும் நேபாள போலீஸ் மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் இணைந்து உயிர் பிழைத்தவர்களைத் தேடினர். மீட்புப் பணியாளர்கள் இரவில் டார்ச்லைட்களைப் பயன்படுத்தி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து உதவி செய்ததாக தலைமை மாவட்ட அதிகாரி சுவேதி தெரிவித்தார். மேலும், அந்த இடத்தில் போதுமான நிவாரணப் பொருட்கள் இல்லாததால், நடவடிக்கை கடினமாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.



