தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்..
மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று இபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது.. இதனை தொடர்ந்து கட்சியின் கொறடா மற்றும் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்க இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு வழங்கினர்.
இதனிடையே எஸ்.பி. வேலுமணி மற்றும் இபிஎஸ் தரப்பு சமரசமாக போய்விட்டனர்.. சி.வி. சண்முகம் தவிர, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர்.. இதையடுத்து எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சபாநாயகரிடம் சென்று தாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற கடிதம் கொடுத்தனர்..
மேலும் ஆளுங்கட்சியான தவெக கொடுத்த ஆதரவையும் திரும்ப பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர்.. மறுபுறம் இபிஎஸ் தரபு தவெகவுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கொடுத்த மனுவையும் வாபஸ் பெற்றனர்.. இந்த மனுக்களை பரிசீலித்து தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்..
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்க மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பதிலளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் மனு அளிக்கப்பட்டது.. பின்னர் 21 பேரை மன்னிப்பதாக இபிஎஸ் கடிதம் அளித்துள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 13.05.2026-ல் அளித்த கடிதம் அடிப்படையில் மன்னிப்பு கோரிக்கையை ஏற்கிறேன்.. எனவே 25 உறுப்பினர்களில் 21 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது.. மீதமுள்ள 4 பேர் மீது மட்டுமே நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.. பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.. என்ன நடவடிக்கை என்பதை விரைவில் விளக்கமாக அறிவிப்பேன்..” என்று தெரிவித்தார்..



