மாசி மாதத்தின் முழு நிலவு தினமான பௌர்ணமியும், மகம் நட்சத்திரமும் கைகோர்க்கும் ‘மாசி மகம்’ திருநாள், ஆன்மீக ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வானியல் மற்றும் சாஸ்திர விதிகளின்படி, சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் இந்த வேளையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவானும் மகம் நட்சத்திரத்திற்குள் நுரைக்கும் நிகழ்வையே நாம் ‘மகாமகம்’ எனப் போற்றிக் கொண்டாடுகிறோம். ராஜ வம்சத்தினர் மற்றும் பேரரசர்கள் பிறக்கும் நட்சத்திரமாக மகம் கருதப்படுவதால், இந்த நாளுக்குத் தனித்துவமான தெய்வீக களை உண்டு.
பூமிக்கு வரும் தேவர்கள் :
ஐதீகத்தின்படி, மாசி மகம் அன்று முப்பத்து முக்கோடி தேவர்களும், மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களும் மேல் உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. பூமியில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள அவர்கள் வருவதால், அன்றைய தினம் நீர்நிலைகளில் தெய்வீக ஆற்றல் கரைபுரண்டு ஓடும். அந்தப் புனித நேரத்தில் நாமும் ஏரி, குளம் அல்லது ஆறுகளில் நீராடினால், நம்முடைய தீவினைகள் நீங்கி இறையருள் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதன் காரணமாகவே, தமிழகத்தின் முக்கியக் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று தீர்த்தவாரி மேற்கொள்கின்றனர்.
மாசி மகத்தின் மற்றுமொரு சிறப்பு ‘தீர்த்தவாரி’ உற்சவமாகும். அன்று ஊர் ஏங்கும் உள்ள ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கடல் அல்லது நதிக்கரைகளில் எழுந்தருளுவார்கள். சில இடங்களில் ஒரே நீர்நிலையில் பல ஊர் தெய்வங்கள் சங்கமிக்கும் அபூர்வ நிகழ்வும் அரங்கேறும். சுவாமிக்கு நீர்நிலைகளில் அபிஷேகம் மற்றும் நீராடல் நடைபெறும் அதே வேளையில், பக்தர்களும் நீரில் மூழ்கித் தங்களின் வேண்டுதல்களை முன்வைப்பார்கள். இது பாவங்களை வேரறுக்கும் ஒரு மகத்தான ஆன்மீக சடங்காகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒரு விசேஷ நாள் என்பது ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்குரியதாக இருக்கும். ஆனால், மாசி மகம் அனைத்துத் தெய்வங்களின் அருளாசியும் ஒருங்கே கிடைக்கும் நாளாகத் திகழ்கிறது. வருண பகவானுக்குச் சிவன் சாப விமோசனம் அளித்ததும், முருகப் பெருமான் சிவனுக்கு மந்திர உபதேசம் செய்ததும் இந்த நாளில்தான். மேலும், பார்வதி தேவி தாட்சாயணியாக அவதரித்ததும், பெருமாள் வராக அவதாரத்தில் பூமியை மீட்டதும் இதே தினத்தில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. திருவண்ணாமலையை ஆண்ட வாரிசு இல்லாத வல்லால மன்னருக்கு, அண்ணாமலையாரே மகனாக வந்து இறுதிச்சடங்கு செய்து முக்தி அளித்ததும் இந்த மாசி மகத்தில்தான் என்பது கூடுதல் சிறப்பு.
மகம் நட்சத்திரம் பித்ருக்களோடு நெருங்கிய தொடர்புடையது என்பதால், இந்நாளில் வழிபாடு செய்வது பித்ரு தோஷங்களை நீக்க உதவும். முன்னோர்களின் ஆசி கிடைப்பதன் மூலம் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாசி மகத்தன்று மேற்கொள்ளும் பரிகாரங்கள் விரைவான பலனைத் தரும். முக்தியைத் தரும் இந்த நன்னாளில் விரதமிருந்து முறைப்படி வழிபடுவது, நம் வாழ்வின் தடைகளைத் தகர்த்து வெற்றியைத் தரும் என ஆன்மீகப் பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : அதிமுகவிடம் 72 தொகுதிகளின் லிஸ்டை கொடுத்த பாஜக..! 35 கண்டிப்பா வேணும்..! குழப்பத்தில் இபிஎஸ்..!



