கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன.
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக கோவில் அருகே யாராவது இறந்துவிட்டால் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்கு ஊரில் யார் இறந்தாலும் அவர்களது உடல் கோவில் வாசலுக்குக் கொண்டு வரப்படுகிறது. சிவபெருமானே நேரில் வந்து அந்த ஆன்மாவுக்கு மரியாதை செய்வதாக கருதப்பட்டு, கோவில் சார்பில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்படுகிறது. அதேபோல், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் அர்ச்சனை செய்வதால் அவர்களுக்கு உடனடி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். கேரளாவின் திருவல்லம் பரசுராமர் கோவிலிலும் ஆன்மாக்கள் நற்கதி அடைய பிரத்யேகப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில், மறைந்தவர்களுக்காக அர்ச்சனை செய்து ‘மோட்ச தீபம்’ ஏற்றும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்வதால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என பக்தர்கள் நம்புகின்றனர். திருவிடைமருதூர் பூமிநாதர் கோவிலிலும் முன்னோர்களின் சாபம் நீங்க இத்தகைய அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. ராமேஸ்வரம் என்றாலே தர்ப்பணம் கொடுப்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால், அங்கு மறைந்தவர்களின் பெயரில் அர்ச்சனை செய்யும் வழக்கமும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
பொதுவாக ஒருவர் மறைந்துவிட்டால் அவர்களது ஜாதகம் மற்றும் பொருட்களைப் புனித நீர்நிலைகளில் விட்டுவிடுவது வழக்கம். மாத அமாவாசை மற்றும் வருடாந்திர திதி நாட்களில் மட்டுமே அவர்களை நாம் நினைவு கூர்கிறோம். ஆனால், முன்னோர்கள் இறைவனின் திருவடிகளை தடையின்றி அடையவும், அவர்கள் எங்கு இருந்தாலும் துன்பமின்றி இருக்கவும் அவர்களது பெயரை சொல்லி சிவபுராணம் ஓதி பூஜை செய்வது உன்னதமான ஒன்றாக கருதப்படுகிறது. பித்ரு தோஷங்களால் அவதிப்படுபவர்கள் மற்றும் முன்னோர்களுக்கு உரிய மரியாதை செய்ய விரும்புபவர்கள், வாழ்நாளில் ஒருமுறையாவது இத்தகைய சிறப்பு தலங்களுக்கு சென்று வருவது சிறந்தது.



