ஊக்கமருந்து சோதனைக்கு வராத விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷெஃபாலி வர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தற்போது இந்திய கிரிக்கெட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, இருவரும் பதிவு செய்யப்பட்ட தேர்வுக் குழு (RTP) பட்டியலில் இடம்பெற்றிருந்தும், குறிப்பிட்ட சோதனைகளுக்கு ஆஜராகாததற்கான காரணத்தை இதுவரை விளக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து NADA அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தேசிய கூட்டமைப்பான பிசிசிஐ மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: NADA-விடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற்றுள்ள நிலையில், அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்” எனவும் பிசிசிஐ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கியமானது, யஷஸ்வி மற்றும் ஷெஃபாலி இருவருக்கும் இது முதல் முறை தவறு எனக் கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி, RTP பட்டியலில் உள்ள வீரர்கள் 12 மாதங்களில் மூன்று முறை சோதனையை தவறவிட்டால் அது ஊக்கமருந்து விதிமீறலாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய RTP பட்டியலில் சுமார் 13 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மகளிர் அணியில் தீப்தி ஷர்மா மற்றும் ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோரும் RTP பட்டியலில் உள்ளனர். இந்த சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட விளக்கம் மற்றும் விசாரணை முடிவுகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: Flash : விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் மனு..!



