இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் பெரும் கவலையை தரும் விஷயமாக மாறியுள்ளது. உடல் எடையை குறைக்க ஜிம், கடுமையான உடற்பயிற்சிகள் எனப் பலரும் மல்லுக்கட்டி வரும் நிலையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 38 கிலோ எடையை குறைத்துள்ளார்.
உடல் எடையை குறைப்பது குறித்துப் பேசிய குஷ்பு, “எடையைக் குறைப்பது எளிது, ஆனால் அந்த எடையைத் தக்கவைப்பதுதான் சவாலானது” என்கிறார். இதற்காக அவர் ஜிம்மிற்குச் சென்று கடினமான பயிற்சிகளைச் செய்வதில்லை. மாறாக, வீட்டு வேலைகளை செய்வது, யோகா மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை வீட்டிலேயே மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நம் உடலுக்கு எது செட் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவதே வெற்றிக்கான வழி என்கிறார் அவர்.
உணவு முறை குறித்துப் பகிர்ந்த குஷ்பு, “நான் கலோரி கணக்குப் பார்த்துச் சாப்பிடும் ஆள் கிடையாது. இத்தனை கிராம் மீன் தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் நான் கட்டுப்பாடு விதிப்பதில்லை. என் உடலுக்கு எவ்வளவு பசிக்கிறதோ, அவ்வளவு சாப்பிடுவேன்” என்று கூறியுள்ளார். இருப்பினும், தனக்குப் பிடித்த மட்டன் பிரியாணி போன்ற உணவுகளை டயட் சமயங்களில் தவிர்ப்பது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் இன்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதும், மன அழுத்தமில்லாத வாழ்க்கையுமே காரணம் என அவர் கூறுகிறார். பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள், பஜ்ஜி மற்றும் போண்டா போன்ற நொறுக்கு தீனிகளைத் தவிர்ப்பது அவசியம். சரிவிகித உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 5 முட்டைகள் வரை உட்கொள்வது உடலுக்குத் தேவையான புரதத்தை தரும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஜிம்மிற்குச் செல்ல முடியாதவர்கள் தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
Read More : IPL 2026 ஒத்திவைப்பு..? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தான் காரணமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!



