திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்ற சம்பவங்களே அதிகமாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. கணவன்-மனைவி இடையேயான மோதல்கள், குடும்ப வன்முறை, தற்கொலைகள், மற்றும் திருமண முறிவுகள் போன்ற சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகின்றன.
சில நேரங்களில் குழந்தைகளும் இந்த குடும்பப் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. இத்தகைய சூழலில், பல்வேறு குடும்பப் பிரச்சினைகளில் சிக்காமல் தனது திருமண வாழ்க்கையை பெண் ஒருவர் ஆரம்பித்துள்ளார். ஏனென்றால், அவர் மனிதரை இல்லாமல் நதி ஒன்றை திருமணம் செய்துள்ளார். இவர் நதியை திருமணம் செய்த காரணம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
பிரிட்டனின் பிரிஸ்டல் நகரம் வழியாக ஓடும் புகழ்பெற்ற ஏவன் நதியின் பரிதாபகரமான நிலையை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, 2023 ஆம் ஆண்டு ரோக்சி லெவின் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அந்த நதியை அடையாளப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் காரணமாக தொடர்ந்து மாசடைந்து வரும் ஏவன் நதிக்கு, மனிதர்களைப் போலவே அடிப்படைச் சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த வித்தியாசமான நடவடிக்கையின் நோக்கம், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இயற்கை வளங்களுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு அவசியம் என்பதை உலகிற்கு எடுத்துரைப்பதாகும். நதிகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ரோக்சி லெவின், ஏவன் நதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே அதனை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறார்.
அவரது இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பிரிட்டனில் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட சில நாடுகளில் நதிகளுக்கு மனிதர்களுக்கு இணையான சட்டப்பூர்வ உரிமைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதை அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார்.
அதேபோல், ஏவன் நதிக்கும் பிரிட்டன் அரசு விரைவில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் உரிமைகளையும் வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னை “நதியின் மனைவி” என்று அடையாளப்படுத்திக் கொண்டு அவர் முன்னெடுத்து வரும் இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம், உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: தாய்க்கு மகள் செய்யும் காரியமா இது? அரசு வேலை ஆசையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!



