தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட தென்மண்டல விசுவாசிகள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்து வருவது ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை பலப்படுத்தி வருவது, வரும் தேர்தலில் மதுரை மற்றும் மேற்கு மண்டலங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மதுரையை சேர்ந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி ஆகியோர் ஏற்கனவே இபிஎஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் ஐக்கியமான நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முக்கியப் புள்ளியும் இணைந்துள்ளார். அழகிரி பேரவையின் ஈரோடு மாவட்ட தலைவராக பல ஆண்டுகளாக தடம் பதித்து வந்த சுகுணா சத்தியன், தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைய முடிவு செய்துள்ளார்.
மு.க.அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்த சுகுணா சத்தியன், விரைவில் தனது ஆதரவாளர்களுடன் சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தன்னை முறைப்படி தாய்க்கழகத்தில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட இவர் அ.தி.மு.க-வில் இணைவது, கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகிரி ஆதரவாளர்களின் இந்த அணிமாற்றம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கியில் கணிசமான பாதிப்பை உண்டாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Read More : கரைந்து போகும் ஓபிஎஸ் அணி..? மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!! எடப்பாடி பழனிசாமி குஷி..!!



