தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது கிரீன் மேஜிக் அதாவது பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை திடீரென 60 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைந்துள்ளது.. 2023-ல் இருந்து படிப்படியாக இதன் விற்பனை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் முழுமையாக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது..
இதையடுத்து ஆவின் பச்சை பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி உள்ளிட்டோர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.. ஆனால் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய திட்டம் என பரப்பப்படும் தவறான தகவல் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது..
மேலும் “Green Magic” பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் Green Magic பால் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆவின் பச்சை பால் விவகாரத்தில் தமிழக அரசு பொய்யான விளக்கத்தை அளித்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும். இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : “தவெக காய்ந்து போன சக்தி.. அதிமுக எம்.எல்.ஏக்களை ஷாப்பிங் செய்யும் முதல்வர் விஜய்..” ஸ்டாலின் விமர்சனம்..!



