அதிமுக கூட்டணியில் தொடரும் குழப்பம்..! இதே நிலை நீடித்தால் அவ்வளவு தான்..! கடும் நெருக்கடியில் இபிஎஸ்..!

palaniswami edappadi k pti 1200x768 1

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என மும்முரமாக பணியாற்றி வருகின்றன.. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்னும் வெளிவராமல் தாமதமாகி வருகிறது..


அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், இந்த ஆலோசனையில் இழுபறி நீடித்து வருகிறது..

குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக இடையே தொகுதி எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த சந்திப்பில் தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது,

இதனிடையே மார்ச் 1 ஆம் தேதி தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் வெற்றி பெற கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக உடன் தொகுதி பங்கீடு விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால் அடுத்த கட்ட ஆலோசனைகளும் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு விவகாரம்

பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாகவும், அதிலும் அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.. இதுவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட பிறகே மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்ற நிலை அதிமுக தரப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்புமணி பாமக, தாங்கள் விரும்பும் 30 தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக உடனான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாததால், பாமக கோரும் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், தற்போது பாமக எம்.எல்.ஏ.க்கள் உள்ள மேட்டூர் மற்றும் மயிலம் தொகுதிகளை அதிமுக தலைமையிடம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இதனால் பாமக தரப்பில் சில எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தங்களது செல்வாக்கு உள்ள பகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பாமக தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி

பாஜக உடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத சூழலில் பாமக கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் நடைபெறும் தொகுதி பங்கீடு ஆலோசனைகள் மேலும் தொடரக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஆலோசனைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் வேகமான நடவடிக்கை

குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு விவகாரம் சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருப்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தாலும், தொகுதி பங்கீடு தாமதமாக இருப்பது அந்த பணிகளை மறைமுகமாக பாதிக்கக்கூடும் என்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : ” எனக்கு Hurt ஆகுது..” சங்கீதா விவாகரத்து விவகாரம்.. முதன்முறையாக மனம் திறந்த விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?

RUPA

You May Like