கடுமையான வெயில், காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்ற காரணங்களால் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு முகம் கருமையாகத் தோன்றுதல், எண்ணெய் பசை அதிகரித்தல், பருக்கள் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிப்பது அவசியம்.
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சருமம் சற்று தடிமனாகவும், அதிக எண்ணெய் சுரப்பைக் கொண்டதாகவும் இருக்கும். எனவே, சருமத்தில் படியும் அழுக்குகளை நீக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த ஃபேஸ் பேக்குகளை தயாரித்து பயன்படுத்துவது சுலபமான வழியாகும்.
ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாற்றைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். அதேபோல், ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் கரும்பு சாற்றில் தேவையான அளவு கடலை மாவை கலந்து பேஸ்ட் தயாரித்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். மேலும், ஒரு டீஸ்பூன் வேப்பிலைப் பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
பழுத்த வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவக்கூடும். இருப்பினும், ஒவ்வொருவரின் சருமத் தன்மையும் வேறுபடுவதால், புதிய கலவைகளைப் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் சோதனை செய்து பார்ப்பது நல்லது.
Also Read: “அடேய்… அது என் காதுடா!” வாடகைக்கு வீடு விடும் போட்டியில் காதைக் கடித்துக் குதறிய நபர்!



