இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் போர் சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமலுக்கு வந்ததாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து எஸ்மா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.. பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த சட்டம் அமலானது.
அதன்படி எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படுவதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மாநிலங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்தை மத்திய அரசே நேரடியாக கண்காணிக்கும் வகையில் எஸ்மா சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருட்களின் அதிகபட்ச விலையை அரசே நிர்ணயிக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.
இந்தியாவில் தற்போது 33.08 கோடி செயலில் உள்ள எல்.பி.ஜி நுகர்வோர் உள்ளனர். அவர்களுக்கு எரிவாயு விநியோகம் இடையூறு இல்லாமல் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எஸ்மா என்றால் என்ன?
Essential Services Maintenance Act, 1968 பொதுவாக எஸ்மா (ESMA) என அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் 1968 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் போன்ற முக்கியமான சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தில் “அத்தியாவசிய சேவைகள்” என்று கருதப்படும் பல சேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எந்த சேவைகள் அத்தியாவசியம் என்பதை மாநில அரசுகள் தங்களாகத் தேர்வு செய்யும் அதிகாரமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்மா கடைசியாக எப்போது பயன்படுத்தப்பட்டது?
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற போருக்கு றகு எண்ணெய் துறையில் எஸ்மா சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்தியாவின் உள்ளூர் தேவைக்கான எரிபொருளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதிக லாபம் கிடைப்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



