தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. இந்த சூழலில் தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. தவெக தனித்து நிற்பது, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே உதவும் என்று விஜய்யிடம் பாஜக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!” என்று தெரிவித்துள்ளார்..
Read More : தவெக NDA கூட்டணிக்கு வரணும்.. சீட் பேரத்தை உயர்த்திய பாஜக..! விஜய் வைத்த 2 டிமாண்ட்..! பரபர தகவல்கள்..!



