தான்சானியாவில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தான்சானியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மொரோ்கோரோ – டார் எஸ் சலாம் நெடுஞ்சாலையில் உள்ள மக்கம்பரணி பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. டார் எஸ் சலாமிலிருந்து எம்பேயா நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தும், இரிங்காவிலிருந்து டார் எஸ் சலாம் நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
முன்னால் சென்ற இதர வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் பேருந்து மீது மோதியதாக மொரோ்கோரோ பிராந்திய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரி ஜோசப் ம்வாசாபேஜா தெரிவித்துள்ளார்.
இந்த மோதலின் காரணமாக பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது. விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சூைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தான்சானியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்து வரிசையில் இந்தச் சோகச் சம்பவமும் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டின் வடக்கு கிளிமஞ்சாரோ பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்திலும் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. அதனைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு விதிகளை மிகவும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் சாமியா சுலுஹு ஹசன் கோரிக்கை விடுத்திருந்தார்.
உலகிலேயே சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் விகிதம் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில்தான் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க கவலையளிக்கும் விஷயமாகும்.
உலகளாவிய சராசரி 100 பேருக்கு 18 என்ற அளவில் இருக்கும் நிலையில், ஆப்பிரிக்காவில் இந்த விகிதம் 100,000 பேருக்கு சுமார் 26 ஆக உள்ளதாக ஐநா ஆப்பிரிக்கப் பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகப் போக்குவரத்தில் உள்ள மொத்த வாகனங்களில் இப்பகுதி வெறும் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



