நாடு முழுவதும் இன்று காதலர் தினத்தை பலரும் கொண்டாடி வரும் அதே வேளையில், இந்தியாவின் கருப்பு நாளாகவும் இந்த பிப்ரவரி 14-ந் தேதி இருந்து வருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஜம்மு காஷ்மீரின் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது லெத்போரா. இங்கு கடந்த 2019ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். படைக்குச் சொந்தமான வாகனத்தில் நமது நாட்டின் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இந்த சாலையில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த வாகனம் நமது பாதுகாப்பு படை வீரர்கள் வாகனத்தில் மோதியது.
வெடிமருந்துகள் நிரம்பிய அந்த வாகனத்தை பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்ற தீவிரவாதி ஓட்டிவந்து திட்டமிட்டு நமது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். திட்டமிட்டு அவன் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அன்றைய தினம் பிற்பகல் 3.10 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் மூழ்கியது. அமைதியையும், சகோதரத்துவத்தையும் எப்போதும் விரும்பும் இந்தியா பாதுகாப்பு வீரர்கள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்கள் மீதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த விசாரணையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகு சி.ஆர்.பி.எப்., ராஷ்ட்ரிய ரைபிள் மற்றும் எஸ்.பி.ஜி. படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஷீத்காசி என்பவனையும் சுட்டுக்கொன்றனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் உயர்மட்ட தூதரை வரவழைத்தது. புல்வாமா தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் தங்கள் பதிலடி கொடுக்கும் இடம், நேரம் மற்றும் இயல்பு ஆகியவற்றைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றே நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஆசாத் காஷ்மீர் எனப்படும் ஆக்கிரமிப்பு காஷ்மீரான பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேரடி தாக்குதலை நடத்தியது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இந்தியா நடத்திய முதல் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.
அந்த 20 நிமிடங்கள் நடந்தது என்ன? இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ்-2000 ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பாலகோட்டில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது 1000 கிலோ ஸ்பைஸ் 2000 ரக வெடிகுண்டுகளை வீசியது. வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் 20 நிமிடங்களில் அழிக்கப்பட்டனர்.
இதில் இந்தியாவிற்கு உள்நாட்டு வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் (AEW&C) விமானம் நேத்ரா முழு நடவடிக்கையையும் ஆதரித்தது. பாகிஸ்தானில் இருந்து வரும் எந்த நடவடிக்கையையும் கண்காணிக்க ஹெரான் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த துயரம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அந்த மாவீரர்களை நாடும், நாமும் போற்றுவோம்.